Freitag, September 01, 2006

பெரிய இறால்களைத் தவிருங்கள்

கடல் உணவுகள் உடல் நலத்துக்கு மிகவும் நல்லவைதான். ஆனாலும் நாம் நினைப்பது போல விற்பனைக்கு வரும் அத்தனை கடலுணவுகளுமே இயற்கை முறையில் கடலில் வளர்ந்தவை இல்லை என ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.

ஏறக்குறைய 20 வீதம் கடலுணவுகள் - கடலிலிருந்து - குளங்களுக்கும் செயற்கை முறையான நீர்த்தொட்டிகளுக்கும் இடம் மாற்றப் பட்டு, மரம் செடிகளுக்கு பசளை இடுவது போன்று மருந்துகள் கலந்த செயற்கை உணவுகள் கொடுக்கப் பட்டு வளர்க்கப் பட்டவையே எனத் தெரிய வந்துள்ளது.

கடந்த வருடத்துக்கு முந்திய வருடம் கோடைகாலப் பகுதியில் விற்பனைக்கு வந்த அத்தனை சீன இறால்களும் நண்டுகளும் விற்பதற்குத் தடை செய்யப் பட்டு வெளியேற்றப் பட்டனவாம்.

காரணம் - அந்த இறால்களுக்கும் நண்டுகளுக்கும் மனிதரின் உடலுக்குக் கெடுதி விளைவிக்கக் கூடிய தடைசெய்யப் பட்ட Antibiotic ஏற்றப் பட்டிருப்பது கண்டு பிடிக்கப் பட்டதாம்.

இந்த Antibiotic க்கு மனிதரின் எலும்புமச்சையை பழுதடைய வைக்கும் தன்மை உள்ளது தற்போது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

அதன் காரணமாக தற்போது சீனாவிலிருந்து ஐரோப்பியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் இறால் மீன் போன்றவற்றை பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே இறக்குமதிக்கு அனுமதிக்கிறார்களாம்.

இருந்தாலும் இறால்களை வாங்கும் போது அதீதமான பருமனுள்ள பெரிய இறால்களை தவிர்க்கும் படி ஐரோப்பிய யூனியன் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. மருந்து ஏற்றப் பட்ட இறால்கள்தான் அப்படி பெரிதாக வளர்கின்றனவாம்.

Vital - யேர்மனிய சஞ்சிகையிலிருந்து

Montag, August 28, 2006

மனம் தளராத முயற்சிகள்

அந்த இளைஞன் நன்றாகக் கார்ட்டுன் வரைவான். தான் வரைந்த படங்களை எடுத்துக் கொண்டு போய் பல இடங்களில் காட்டி வேலை கேட்டான். யாரும் வேலை கொடுக்கவில்லை. "இந்தக கார்ட்டுனையெல்லாம் மக்கள் ரசிக்க மாட்டார்கள்" என்று அவனை ஒதுக்கினார்கள். ஆனால் அந்த இளைஞன் தன் முயற்சியைக் கைவிட வில்லை.

இந்தச் சூழ்நிலையில் ஓர் ஆலயத்தில் சிறு பிள்ளைகளுக்கான கார்ட்டுன் படங்களை வரையும் வாய்ப்புக் கிடைத்தது. அவனை ஒரு பழைய குப்பைகூளம் நிறைந்த அறையில் அமர வைத்து படம் வரையச் சொன்னார்கள். அந்த அறையில் எலிகளும், சுண்டெலிகளும் மேலேயும் கீழேயும் ஓடிக் கொண்டிருந்தன. அந்த இளைஞன் மனம் தளரவில்லை. "வேலை வேண்டாம்" என்று ஓடவில்லை. அங்கேயே உட்கார்ந்து படம் வரைந்தான். அங்கு ஓடிய ஒரு எலியையே கார்ட்டுனாக்கினான். அந்தக் கார்ட்டுன்தான் இன்று உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் இருக்கும் மிக்கி மவுஸ். அதை உருவாக்கிய வால்ட் டிஸ்னிதான் அந்தக் கார்ட்டுனிஸ்ட்.

- ரஞ்சன் -
குமுதம் - 21.3.2005

மனம் தளராத முயற்சிகள் நிச்சயம் வெற்றியைக் கொடுக்கும்.