Samstag, Januar 31, 2009

நடிகர் நாகேஷ் மரணமடைந்தார்


31.1.2009

தமிழ் திரைப்பட வரலாற்றில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பதிவு செய்தவரும், நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவருமான நாகேஷ் இன்று(31.1.2009) காலமானார். அவருக்கு வயது 75.

அண்மைக்காலமாகவே உடலநலக் குறைவால் அவதியுற்று வந்த அவர், சென்னையில் இன்று காலமானார்.

தமிழ்த் திரை உலகில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் சிகரம் தொட்ட நாகேஷின் பூர்வீகம் மைசூர். தந்தை பெயர் கிருஷ்ணாராவ். கர்நாடக மாநிலம் அரிசிக்கரேயில் ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்தவர். தாயார் ருக்மணி அம்மாள். ஆரம்பகாலக்கட்டத்தில் இவர்கள் தமிழகத்தில், தாராபுரத்தில் வசித்து வந்தனர். நாகேஷின் முழுப்பெயர் நாகேஸ்வரன்.

'தாமரைக்குளம்' படத்தின் மூலம் சினிமா உலகில் நுழைந்தவர், 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன், சிவக்குமார், ரஜினிகாந்த், கமலஹாசன், சரத்குமார் போன்றோருடனும் தனது நடிப்பு முத்திரையை பதித்தவர். நடிகர் விஜய், அஜீத் உள்ளிட்ட இளைய தலைமுறையினருடனும் நடித்தவர்.
தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல், தாமரை நெஞ்சம், எதிர்நீச்சல், அபூர்வ ராகங்கள், மக்கள் என் பக்கம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன் என நாகேஷின் நடிப்புத் திறனைப் பறைசாற்றும் படங்களை அடுக்கினால் பக்கங்கள் போதாது!

வாழ்க்கை குறிப்பு

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரான நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ் என்பதாகும். தந்தை கிருஷ்ணாராவ், தாயார் ருக்மணி அம்மாள். கிருஷ்ணாராவ் ரெயில்வேயில் வேலை பார்த்து வந்தார். தமிழ்நாட்டுக்கு வந்த அவர்கள், தாராபுரத்தில் தங்கியிருந்தனர். 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 27ந் தேதி பிறந்த நாகேஷ், தாராபுரத்தில் தனது இளமை பருவத்தை கழித்தார். பல இடங்களில் வேலை பார்த்த அவர், கடைசியாக ரெயில்வேயில் குமாஸ்தாவாக சென்னையில் பணி யாற்றினார்.

சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுகொண்ட நாகேஷ்,அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். ஒரு நாடகத்தில் வயிற்றுவலி காரணமாக அவர் நடித்ததை பார்த்து எம்ஜிஆர் வெகுவாக பாராட்டினார்.

திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்த நாகேஷ், தாமரைக்குளம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார்.

அதன் பிறகு பல படங்களில் நகைச்சுவை நடிகராக வேடந்தாங்கி சிறப்பாக நடித்தார். அவருக்கு பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா ஆவார். இந்த ஜோடி இல்லாத படமே ஒருகாலத்தில் இல்லை என்ற நிலை நிலவியது.

கே. பாலசந்தர் கதைவசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்து குணச்சித்ர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார்.

திருவிளையாடல் படத்தில் சிவாஜியுடன், புலவர் தருமியாக நடித்த நாகேசுக்கு அந்த படத்தில் பெரும் புகழ் கிட்டியது. காதலிக்க நேரமில்லை, தில்லானா மோகனாம்பாள் ஆகிய படங்களில் நாகேஷின் நடிப்பு அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது.

தேன்கிண்ணம், நவக்கிரஹம், எதிர்நீச்சல், நீர்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் அவர் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.

நடிகர் வீரப்பனுடன் சேர்ந்து பணத்தோட்டம் படத்தில் அவர் அடிக்கும் லூட்டிகளை பார்த்து சிரித்து சிரித்து வயிறு புண்ணாகாதவர்கள் இல்லை என்று கூறலாம். கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி, அன்பே வா உள்பட பல படங்களில் அவரது நகைச்சுவை நடிப்பு பிரகாசித்தது.

கமலஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் கொடும் வில்லனாகவும் அவர் தோன்றினார். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள நாகேஷ் நடித்த கடைசி படம் தசாவதாரம் ஆகும்.

நாகேஷின் இழப்பு திரையுலகில் ஈடுசெய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. முதல்வர் இரங்கல் நாகேஷின் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். கலைத்துறையில் புகழ் பெற்ற சிறந்த குணச்சித்திர நடிகரான நாகேஷ் இன்றைய தினம் இயற்கை அடைந்த செய்தியினை அறிந்து பெருந்துயருற்றேன்.

தனிச்சிறப்பான நகைச்சுவையாலும், பல திறப்பட்ட நடிப்பாற்றலாலும் தமிழகத் திரைப்பட வரலாற்றில் தனக்காக ஒரு தனி இடத்தைப் பெற்றவர் அருமை நண்பர் நாகேஷ். தனிப்பட்ட முறையில் என்னிடம் மாறாத அன்பும், பாசமும் கொண்டவர். தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் பேராதரவையும் மதிப்பையும் பெற்றவர்.

தீக்குளித்து மரணமடைந்த முத்துக்குமார்

ஈழத் தமிழர் படுகொலை: தீக்குளித்து மரணமடைந்த முத்துக்குமார்

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு இன்று (29.01.2009) வியாழக்கிழமை காலை முத்துக்குமார் எனும் இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் "பெண்ணே நீ" மாத இதழில் நிருபராக பணியாற்றி வந்தவர் முத்துக்குமார் . அதற்கு முன்பு தொலைக்காட்சி தொடர்களில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார். சென்னை கொளத்தூர் மக்கான் தோட்டம் திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்த இவருக்கு வயது 30. தமிழ் மீது அதிகம் ஆர்வம் கொண்ட இவர் எப்போதும் தமிழர்கள் குறித்து ஆர்வமாக பேசுவார். கடந்த சில மாதங்களாக இலங்கையில் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படுவது முத்துக்குமாரின் மனதில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அலுவலகத்துக்கு இன்று காலை 10:30 மணியளவிற்கு வந்த அவர், தன் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அப்போது, ஈழத் தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களை காப்பாற்றக் கோரியும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவைக் கண்டித்து முழக்கமிட்டபடி சாஸ்திரி பவனுக்குள் அங்கும் இங்கும் அலறியபடி ஓடினார். இதற்கிடையே உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமார் ஒரு இடத்தில் சாய்ந்து விழுந்தார்.

அங்கு வந்த காவல்துறையினர் கரிக்கட்டையாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முத்துக்குமாரை மீட்டனர். அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, ஈழத் தமிழர் நலன் காக்க 14 அம்ச கோரிக்கை அடங்கிய ஒரு துண்டுப் பிரசுரத்தை முத்துக்குமார் வைத்திருப்பது தெரிந்தது. அது தொடர்பான விசாரணை நடந்துக் கொண்டிருக்கும் நிலையில் முத்துக்குமார் உடல்நிலை மோசமானது. பின்னர் அவர் இறந்துப் போனார்.

முன்னதாக காவல்துறையினர் முத்துக்குமாரிடம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது அவர் கூறியதாவது:

எனது பெயர் முத்துக்குமார், எனது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகில் உள்ள ஆத்தூர் கொழுவை நல்லூர் ஆகும். எனது தந்தை தாம்பரத்தில் பழைய இரும்புக்கடை வைத்துள்ளார். எனக்கும் அவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது. எனவே நான் கொளத்தூரில் உள்ள எனது சகோதரி தமிழரசியுடன் வசித்து வருகிறேன். இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும்.
மத்திய அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களை திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக் கொண்டேன். வேறு எங்கும் தீக்குளித்தால் சாதாரணமாக விட்டு விடுவார்கள். எனவே தான் மத்திய அரசு அலுவலகத்துக்குள் சென்று தீக்குளித்தேன். இலங்கை தமிழர்களை காப்பாற்ற தமிழ்நாட்டில் பெரிய அலை கிளம்பி உள்ளது. எனினும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்கள் பலியாவது வேதனையாக இருக்கிறது.

இவ்வாறு முத்துக்குமார் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழருக்காக இளைஞர் ஒருவர் தீக்குளித்து மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தமிழகமே இந்த சம்பவம் அறிந்து பதற்றம் அடைந்துள்ளது.

தீக்குளிப்பு போன்றவற்றை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்த்து உணர்வு வயப்பட வேண்டும். மனித நேயமுள்ளவர்கள் அனைவரின் அன்பு வேண்டுகோள் இது!

Quelle: http://kosukumaran.blogspot.com/2009/01/blog-post_29.html

Freitag, Januar 23, 2009

மேலாண்மை பொன்னுசாமிக்கு சாகித்ய அகாதமி விருது

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமிக்கு சாகித்ய அகாதமி விருது!

பிரபல தமிழ் சிறுகதை எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (58) இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் இலக்கியப் படைப்புகளுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இதுவாகும். இந்த ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. மேலாண்மை பொன்னுசாமியின் "மின்சாரப் பூ' என்ற சிறுகதை தொகுப்புக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பிறந்தவர் பொன்னுசாமி. ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் வறுமையின் காரணமாக 5-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. இவருக்கு 10 வயதானபோது தந்தை இறந்துவிட்டார். அப்போதே குடும்பப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக்கொண்டார். தற்போதும் சகோதரர் கரிகாலனுடன் சேர்ந்து கூட்டுக் குடும்பமாகவே வசிக்கிறார். கிராமத்தில் உள்ள சிறிய மளிகைக் கடையை நடத்துவதே இவரது பிரதான தொழில்.

இவருக்கு மனைவி பொன்னுத் தாய் மற்றும் 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். 5-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாவிட்டாலும் நூல்களை வாசிப்பதை இவர் நிறுத்தவில்லை. குறிப்பாக இலக்கிய நூல்களை அதிகம் படித்தார். இடதுசாரி இலக்கிய அமைப்புகளுடன் ஏற்பட்ட தொடர்பால் இவர் எழுதத் தொடங்கினார்.

36 நூல்கள்: மேலாண்மை பொன்னுசாமி இதுவரை 36 நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் 22சிறுகதைத் தொகுப்புகள்; 6 நாவல்கள்; 6 குறுநாவல் தொகுப்புகள் ஆகியவை அடங்கும். ஒரு கட்டுரைத் தொகுப்பையும் எழுதியுள்ளார்.

இவரது கதைகள் பல இதழ்களில் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தொடங்கியவர்களில் ஒருவரான பொன்னுசாமி, தற்போது அந்த அமைப்பின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராக உள்ளார்.

விருது கிடைத்தது குறித்து "மேலாண்மை பொன்னுசாமி கூறியது:

இந்த விருதை நான் எதிர்பார்க்கவில்லை. சாகித்ய அகாதெமி விருதை தேர்வு செய்யும் குழுவுக்கு எனது நூல்கள் எதையும் நான் அனுப்பவில்லை. யார் அனுப்பியது என்பதும் எனக்குத் தெரியாது.எனது "மின்சாரப் பூ' தொகுப்புக்கு விருது கிடைத்துள்ளதாக சாகித்ய அகாதெமி விருதுக் குழுவினர் செவ்வாய்க்கிழமை தொலைபேசி மூலம் தெரிவித்தனர். அப்போதுதான் எனது நூல் விருதுக்காக பரிசீலிக்கப்பட்டதே எனக்குத் தெரியும்.

இந்த விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இது கிராமத்து எழுத்தாளர்களுக்கு கிடைத்த அங்கீகரமாகக் கருதுகிறேன் என்றார். இவர் தவிர மேலும் 20 எழுத்தாளர்களும் சாகித்ய அகாதெமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வரும் பிப்ரவரி 17-ம் தேதி நடைபெறவுள்ள விழாவில் அவர்களுக்கு விருது வழங்கப்படும். விருதில் ரூ. 50 ஆயிரமும், தாமிரப் பட்டயமும் அடங்கும்.

ஈரம் மிக்க கரிசல் மண்ணை எழுத்தில் பதிவு செய்து,சாகித்ய அகாதமி விருதுக்கு தேர்வு செய்யப்பெற்றுள்ள மேலாண்மை அவர்களுக்கு 'அதிகாலை'- தமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது

Quelle: அதிகாலை

Donnerstag, Januar 15, 2009

புலோலியூர் க.தம்பையா காலமானார்

இலங்கையின் மூத்த தமிழ் எழுத்தாளர் புலோலியூர் க.தம்பையா கடந்த திங்கட்கிழமை (12.1.2009) காலமானார். இருவாரகாலமாக சுகவீனமுற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் காலமானார். இவர் இறக்கும்போது 72 வயதாகும்.

அரைநூற்றாண்டுக்கு மேலாக இலக்கியத்துறையில் ஈடுபட்டுவந்த இவர் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள் ,நகைச்சுவைகள், நாடகங்கள், கவிதைகளைப் படைத்துள்ளார். இவரது சிறுகதைகள் வீரகேசரி, தினக்குரல், தினகரன் பத்திரிகைகளில் அதிக அளவில் வெளிவந்துள்ளன.

கலைமகள் நிறுவன ஆசிரியரும் தமிழ் பேரறிஞருமான கி.வா. ஜெகநாதனின் மணிவிழாவினை ஒட்டி 1966 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் முதல் பரிசான தங்கப்பதக்கத்தை அவர் பெற்றுள்ளார்.

அத்துடன் சதாவதானி கதிரவேற்பிள்ளை நினைவாக 1976 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட சிறுகதைப்போட்டியில் இவரது "ஓர் ஆசிரியர் அநாதையாகிறார்" என்ற சிறுகதைக்கும், நில அளவைத் திணைக்கள இந்துசங்க பத்தாவது ஆண்டுநிறைவையொட்டி 1975 ஆம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது "ஒருதாய் ஒரு மகள் ஒரு தேவன்" என்னும் சிறுகதைக்கும் முதல் பரிசான தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளது.

1998 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பத்திரிகைகளில் வெளிவந்த சிறுகதைகளில் புலோலியூர் தம்பையா எழுதிய "பணக்கார அநாதைகள்'' என்ற சிறுகதையை சிறந்த சிறுகதையாக தேர்ந்தெடுத்து இந்துசமய கலாசார இலக்கியக்குழு இவருக்கு பணப்பரிசு கொடுத்து கௌரவித்திருக்கிறது. இவர் "அழியும் கோலங்கள்'', "ஐம்பதிலும் ஆசைவரும்' என்னும் இரு சிறுகதைத்தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

இவர் 1966 ஆம் ஆண்டு நிலஅளவைத்திணைக்களத்தில் படவரைஞர் தொழில்நுட்ப உத்தியோகத்தராகப் பதவியேற்று பல உயர் பதவிகளை வகித்தபின்னர் 1984 ஆம் ஆண்டு சேவையிலிருந்து இளைப்பாறினார். அதன் பின்னர் கடந்த 25 ஆண்டுகளாக யாழ்நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியுள்ளார்.

இவரது இறுதிக்காலத்தில் பருத்தித்துறை பிரதேச சபை இவருக்குப் பொன்னாடை போர்த்திக்கௌரவித்திருந்தது. அதே வேளை இலக்கியத்துறைக்குப் பங்களிப்புச் செய்ததற்காக கடந்த ஆண்டுக்கான கலாபூஷணம் விருதையும் இந்துக்கலாசார அமைச்சு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவரது இறுதிக்கிரியைகள் சொந்த ஊரான புலோலிபுற்றளையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அம்பைக்கு இயல் விருது

2008ம் ஆண்டுக்கான இயல் விருது தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முதல் பெண்ணிய எழுத்தாளர் என்று அறியப்படும் அம்பைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம் போன்றவர்களைத் தொடர்ந்து இவ்விருதுக்குரியவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அம்பை, அவருக்கு முன்னும் பின்னுமான பெண்ணிய எழுத்தாளர்களில் தனித்து நிற்பவர். நாற்பது வருடங்களுக்கு மேலாக தன் செயல்பாட்டை எழுத்துக்கும், சிறுகதைகளுக்கும் மட்டுமென்றில்லாமல் இலக்கியத்துக்கு அப்பால் பெண்கள் வாழ்க்கையை வேறு வடிவங்களுக்கும் இட்டுச் சென்றதில் வெற்றி கண்டவர்.

மரபார்ந்த பெண்ணுக்கு கொடுக்கப்படும் மதிப்புகளை அவர் மறுத்தாலும், தன் சுதந்திரத்தை தானே தேடிக்கொள்ளும் பெண்ணின் உரிமைக்காக பேசினாலும், அவர் பெண்மையை மறுத்த பெண்ணியவாதி அல்லர். கர்நாடக சங்கீதமும் பரதநாட்டியமும் தெரிந்தவர். அவருடைய எழுத்து தனித்துவம் வாய்ந்தது. அது வெளிப்படுத்தும் பெண்ணியம் அவருக்கு முந்திய மரபின் அடியொற்றி எழுதிய பெண் எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டது. கலையாக வெளிப்பாடு பெற்றுள்ள முதல் பெண்ணியக் குரல் என்று அம்பையினுடையதைச் சொல்லலாம்.

அம்பையின் நூல்கள்: அந்தி மாலை (நாவல்), சிறகுகள் முறியும் (1976), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (1988), காட்டில் ஒரு மான் (2000), வற்றும் ஏரியின் மீன்கள் (2007), ஆங்கில மொழிபெயர்ப்பில் A Purple Sea (1992), In a Forest, a Deer (2006) ஆகியவையாகும். இவை தவிர தமிழிலக்கியத்தில் பெண்கள் என்ற Face Behind the Mask (1984) ஆங்கில ஆராய்ச்சி நூல். ‘பயணப்படாத பாதைகள்’ - ஓவியம், நாடகம், பாரம்பரிய நடனத் துறைகளில் ஈடுபட்ட பெண்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவு. ‘சொல்லாத கதைகள்’ - சுதந்திரப் போராட்டத்தில் பங்குபற்றிய பெண்கள், தலித் எழுத்தாளர்கள் ஆகியவர்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவு.
SPARROW (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அம்பை அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். Dr. C.S.Lakshmi என்ற தன்னுடைய இயற்பெயரில் The Hindu, The Economics and Political Weekly, The Times of India போன்ற பத்திரிகைகளுக்கு அம்பை அவ்வப்போது எழுதி வருகிறார்.

விருது வழங்கும் விழா ரொறொன்ரோ பல்கலைக் கழக அரங்கில் வரும் மே மாதம் நடைபெறவிருக்கிறது.

Jan-2009