Donnerstag, Januar 15, 2009

புலோலியூர் க.தம்பையா காலமானார்

இலங்கையின் மூத்த தமிழ் எழுத்தாளர் புலோலியூர் க.தம்பையா கடந்த திங்கட்கிழமை (12.1.2009) காலமானார். இருவாரகாலமாக சுகவீனமுற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் காலமானார். இவர் இறக்கும்போது 72 வயதாகும்.

அரைநூற்றாண்டுக்கு மேலாக இலக்கியத்துறையில் ஈடுபட்டுவந்த இவர் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள் ,நகைச்சுவைகள், நாடகங்கள், கவிதைகளைப் படைத்துள்ளார். இவரது சிறுகதைகள் வீரகேசரி, தினக்குரல், தினகரன் பத்திரிகைகளில் அதிக அளவில் வெளிவந்துள்ளன.

கலைமகள் நிறுவன ஆசிரியரும் தமிழ் பேரறிஞருமான கி.வா. ஜெகநாதனின் மணிவிழாவினை ஒட்டி 1966 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் முதல் பரிசான தங்கப்பதக்கத்தை அவர் பெற்றுள்ளார்.

அத்துடன் சதாவதானி கதிரவேற்பிள்ளை நினைவாக 1976 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட சிறுகதைப்போட்டியில் இவரது "ஓர் ஆசிரியர் அநாதையாகிறார்" என்ற சிறுகதைக்கும், நில அளவைத் திணைக்கள இந்துசங்க பத்தாவது ஆண்டுநிறைவையொட்டி 1975 ஆம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது "ஒருதாய் ஒரு மகள் ஒரு தேவன்" என்னும் சிறுகதைக்கும் முதல் பரிசான தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளது.

1998 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பத்திரிகைகளில் வெளிவந்த சிறுகதைகளில் புலோலியூர் தம்பையா எழுதிய "பணக்கார அநாதைகள்'' என்ற சிறுகதையை சிறந்த சிறுகதையாக தேர்ந்தெடுத்து இந்துசமய கலாசார இலக்கியக்குழு இவருக்கு பணப்பரிசு கொடுத்து கௌரவித்திருக்கிறது. இவர் "அழியும் கோலங்கள்'', "ஐம்பதிலும் ஆசைவரும்' என்னும் இரு சிறுகதைத்தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

இவர் 1966 ஆம் ஆண்டு நிலஅளவைத்திணைக்களத்தில் படவரைஞர் தொழில்நுட்ப உத்தியோகத்தராகப் பதவியேற்று பல உயர் பதவிகளை வகித்தபின்னர் 1984 ஆம் ஆண்டு சேவையிலிருந்து இளைப்பாறினார். அதன் பின்னர் கடந்த 25 ஆண்டுகளாக யாழ்நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியுள்ளார்.

இவரது இறுதிக்காலத்தில் பருத்தித்துறை பிரதேச சபை இவருக்குப் பொன்னாடை போர்த்திக்கௌரவித்திருந்தது. அதே வேளை இலக்கியத்துறைக்குப் பங்களிப்புச் செய்ததற்காக கடந்த ஆண்டுக்கான கலாபூஷணம் விருதையும் இந்துக்கலாசார அமைச்சு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவரது இறுதிக்கிரியைகள் சொந்த ஊரான புலோலிபுற்றளையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அம்பைக்கு இயல் விருது

2008ம் ஆண்டுக்கான இயல் விருது தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முதல் பெண்ணிய எழுத்தாளர் என்று அறியப்படும் அம்பைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம் போன்றவர்களைத் தொடர்ந்து இவ்விருதுக்குரியவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அம்பை, அவருக்கு முன்னும் பின்னுமான பெண்ணிய எழுத்தாளர்களில் தனித்து நிற்பவர். நாற்பது வருடங்களுக்கு மேலாக தன் செயல்பாட்டை எழுத்துக்கும், சிறுகதைகளுக்கும் மட்டுமென்றில்லாமல் இலக்கியத்துக்கு அப்பால் பெண்கள் வாழ்க்கையை வேறு வடிவங்களுக்கும் இட்டுச் சென்றதில் வெற்றி கண்டவர்.

மரபார்ந்த பெண்ணுக்கு கொடுக்கப்படும் மதிப்புகளை அவர் மறுத்தாலும், தன் சுதந்திரத்தை தானே தேடிக்கொள்ளும் பெண்ணின் உரிமைக்காக பேசினாலும், அவர் பெண்மையை மறுத்த பெண்ணியவாதி அல்லர். கர்நாடக சங்கீதமும் பரதநாட்டியமும் தெரிந்தவர். அவருடைய எழுத்து தனித்துவம் வாய்ந்தது. அது வெளிப்படுத்தும் பெண்ணியம் அவருக்கு முந்திய மரபின் அடியொற்றி எழுதிய பெண் எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டது. கலையாக வெளிப்பாடு பெற்றுள்ள முதல் பெண்ணியக் குரல் என்று அம்பையினுடையதைச் சொல்லலாம்.

அம்பையின் நூல்கள்: அந்தி மாலை (நாவல்), சிறகுகள் முறியும் (1976), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (1988), காட்டில் ஒரு மான் (2000), வற்றும் ஏரியின் மீன்கள் (2007), ஆங்கில மொழிபெயர்ப்பில் A Purple Sea (1992), In a Forest, a Deer (2006) ஆகியவையாகும். இவை தவிர தமிழிலக்கியத்தில் பெண்கள் என்ற Face Behind the Mask (1984) ஆங்கில ஆராய்ச்சி நூல். ‘பயணப்படாத பாதைகள்’ - ஓவியம், நாடகம், பாரம்பரிய நடனத் துறைகளில் ஈடுபட்ட பெண்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவு. ‘சொல்லாத கதைகள்’ - சுதந்திரப் போராட்டத்தில் பங்குபற்றிய பெண்கள், தலித் எழுத்தாளர்கள் ஆகியவர்களின் வாய்மொழி வரலாற்றுப் பதிவு.
SPARROW (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அம்பை அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். Dr. C.S.Lakshmi என்ற தன்னுடைய இயற்பெயரில் The Hindu, The Economics and Political Weekly, The Times of India போன்ற பத்திரிகைகளுக்கு அம்பை அவ்வப்போது எழுதி வருகிறார்.

விருது வழங்கும் விழா ரொறொன்ரோ பல்கலைக் கழக அரங்கில் வரும் மே மாதம் நடைபெறவிருக்கிறது.

Jan-2009