Dienstag, Mai 31, 2005

அப்பிளைத் தனியாக வையுங்கள்.

எல்லா மரக்கறிகளையும் அல்லது எல்லாப் பழங்களையும் ஒரே பெட்டிக்குள்ளேயோ அல்லது
ஒன்றாகக் குளிர்சாதனப் பெட்டிக்குள்ளேயோ வைக்கக் கூடாது என்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

தக்காளிப் பழத்துடன் சேர்த்து வைக்கப் படும் மரக்கறிகள் விரைவில் பழுதடைந்து விடுவது போல அப்பிளோடு சேர்த்து வைக்கப் படும் பழங்களும் விரைவில் பழுதடைந்து விடுகின்றன.

காரணம் அப்பிளில் இருந்து வெளியாகும் ஒரு பதார்த்தம் மற்றைய பழங்களை விரைவில்பழுக்க வைக்கும் தன்மை கொண்டது. அதனால் அப்பிளோடு சேர்த்து வைக்கப் படும் பழங்கள் விரைவாகப் பழுத்து பழுதடைகின்றன.

Donnerstag, Mai 19, 2005

விச ஊசியா? ஈரல் தானமா?


தீர்வு எப்படி அமையும்?


அமெரிக்க மரணதண்டனைக் கையாள்தலில் இதுவரை முன் வைக்கப் படாத ஒரு விண்ணப்பம்.

40வயது நிரம்பிய Gregory Johnson அமரிக்க சிறைக்கைதி. கொலைக் குற்றத்தின் காரணமாக, 1986ம் ஆண்டிலிருந்து சிறையிலிருக்கிறார். மே 25ந் திகதி அவருக்கான மரணதண்டனைக்காக விசஊசி காத்திருக்கிறது.

மரணத்துக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் ஒரு காலமும் இல்லாத ஒரு பிரச்சனை அவர் குடும்பத்தின் சார்பாக உருவாகியுள்ளது. கல்லீரல் வீக்கத்தினால் பாதிக்கப் பட்டிருக்கும் ஜோன்சனின் சகோதரிக்கு அவசரமாக ஒரு புதிய ஈரல் தேவைப் படுகிறது. தனது ஈரலை தனது சகோதரிக்குக் கொடுக்க ஜோன்சனும் விரும்புகிறார். அவரது ஈரல் சகோதரிக்குப் பொருந்தும் எனவும் வைத்தியர்கள் உத்தரவாதமளித்துள்ளனர்.

மரணதண்டனைக்காகக் காத்திருக்கும் இவரால் தனது ஈரலை தனது சகோதரிக்குத் தானம் செய்ய முடியுமா? சட்டம் அதற்கு அனுமதிக்குமா?

விசஊசி ஏற்றப்பட்டால் இவரது அனைத்து அவயவங்களும் செயலிழந்து விடும்.
இந்த இக்கட்டில் நீதிபதி என்ன முடிவு சொல்லப் போகிறார். நாளை வெள்ளி வரை காத்திருப்போம்.

Dienstag, Mai 17, 2005

அடையாளமா...? தொலைத்தாரா...?

2000 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு தோற்சப்பாத்தை தென்மேற்கு பிரித்தானியாவில் உள்ள ஒரு சுரங்கப்பள்ளத்துக்குள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். கிட்டத்தட்ட 30cm நீளமான, அதாவது தற்போதைய ஐரோப்பிய அளவில் 43-44 அளவுகளைக் கொண்ட இச்சப்பாத்து கிட்டத்தட்ட தற்போதைய சப்பாத்துக்கள் போலவே தைக்கப் பட்டு நூல் போட்டுக் கட்டுவதற்கான ஓட்டைகளுடன் காணப் படுகின்றது.

சுரங்கப்பள்ளத்துகள் தண்ணீர் நிறைந்திருந்த காரணத்தால் கிறிஸ்துவுக்கு முன் 700ம் ஆண்டிலிருந்து கிறிஸ்துவுக்குப் பின் 43ம் ஆண்டுக்குள்ளான காலத்தான என நம்பப் படுகின்ற சுரங்கப்பள்ளத்துள் இருந்த மரப்பொந்துக்குள் காணப்பட்ட இச்சப்பாத்து இன்னும் பழுதடையாமலே இருக்கிறது.

இச் சப்பாத்து ஒரு அடையாளமாக அம் மரப்பொந்தினுள் வைக்கப் பட்டதா அல்லது சப்பாத்துக்குரியவர் சேற்றிலே வழுக்கியதில் அச் சப்பாத்தைத் தொலைத்தாரா என்பது தெரியவில்லை.