Freitag, Januar 23, 2009

மேலாண்மை பொன்னுசாமிக்கு சாகித்ய அகாதமி விருது

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமிக்கு சாகித்ய அகாதமி விருது!

பிரபல தமிழ் சிறுகதை எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (58) இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் இலக்கியப் படைப்புகளுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இதுவாகும். இந்த ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. மேலாண்மை பொன்னுசாமியின் "மின்சாரப் பூ' என்ற சிறுகதை தொகுப்புக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பிறந்தவர் பொன்னுசாமி. ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் வறுமையின் காரணமாக 5-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. இவருக்கு 10 வயதானபோது தந்தை இறந்துவிட்டார். அப்போதே குடும்பப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக்கொண்டார். தற்போதும் சகோதரர் கரிகாலனுடன் சேர்ந்து கூட்டுக் குடும்பமாகவே வசிக்கிறார். கிராமத்தில் உள்ள சிறிய மளிகைக் கடையை நடத்துவதே இவரது பிரதான தொழில்.

இவருக்கு மனைவி பொன்னுத் தாய் மற்றும் 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். 5-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாவிட்டாலும் நூல்களை வாசிப்பதை இவர் நிறுத்தவில்லை. குறிப்பாக இலக்கிய நூல்களை அதிகம் படித்தார். இடதுசாரி இலக்கிய அமைப்புகளுடன் ஏற்பட்ட தொடர்பால் இவர் எழுதத் தொடங்கினார்.

36 நூல்கள்: மேலாண்மை பொன்னுசாமி இதுவரை 36 நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் 22சிறுகதைத் தொகுப்புகள்; 6 நாவல்கள்; 6 குறுநாவல் தொகுப்புகள் ஆகியவை அடங்கும். ஒரு கட்டுரைத் தொகுப்பையும் எழுதியுள்ளார்.

இவரது கதைகள் பல இதழ்களில் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தொடங்கியவர்களில் ஒருவரான பொன்னுசாமி, தற்போது அந்த அமைப்பின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளராக உள்ளார்.

விருது கிடைத்தது குறித்து "மேலாண்மை பொன்னுசாமி கூறியது:

இந்த விருதை நான் எதிர்பார்க்கவில்லை. சாகித்ய அகாதெமி விருதை தேர்வு செய்யும் குழுவுக்கு எனது நூல்கள் எதையும் நான் அனுப்பவில்லை. யார் அனுப்பியது என்பதும் எனக்குத் தெரியாது.எனது "மின்சாரப் பூ' தொகுப்புக்கு விருது கிடைத்துள்ளதாக சாகித்ய அகாதெமி விருதுக் குழுவினர் செவ்வாய்க்கிழமை தொலைபேசி மூலம் தெரிவித்தனர். அப்போதுதான் எனது நூல் விருதுக்காக பரிசீலிக்கப்பட்டதே எனக்குத் தெரியும்.

இந்த விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இது கிராமத்து எழுத்தாளர்களுக்கு கிடைத்த அங்கீகரமாகக் கருதுகிறேன் என்றார். இவர் தவிர மேலும் 20 எழுத்தாளர்களும் சாகித்ய அகாதெமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வரும் பிப்ரவரி 17-ம் தேதி நடைபெறவுள்ள விழாவில் அவர்களுக்கு விருது வழங்கப்படும். விருதில் ரூ. 50 ஆயிரமும், தாமிரப் பட்டயமும் அடங்கும்.

ஈரம் மிக்க கரிசல் மண்ணை எழுத்தில் பதிவு செய்து,சாகித்ய அகாதமி விருதுக்கு தேர்வு செய்யப்பெற்றுள்ள மேலாண்மை அவர்களுக்கு 'அதிகாலை'- தமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது

Quelle: அதிகாலை