Donnerstag, Mai 20, 2004

குழந்தை விரைவில் கதைக்கத் தொடங்குவதற்கு

ஓரு குழந்தை விரைவில் கதைக்கத் தொடங்குவதற்கும், கதைக்கப் பிந்துவதற்கும் குழந்தையின் புத்திசாலித்தனம் காரணமல்ல என அமெரிக்க Yale பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Steven Reznik கூறுகிறார்.

ஓரு குழந்தை விரைவில் கதைக்கத் தொடங்குவதற்கும், கதைக்கப் பிந்துவதற்கும் காரணம்
ஒன்று - பரம்பரை
இரண்டாவது - தாய் தந்தையர்
என அவர் கூறுகிறார்.

தாய் தந்தையர் பிள்ளையுடன் எவ்வளவு தூரம் கதைக்கிறார்களோ அவ்வளவு விரைவில் பிள்ளைகள் கதைக்கத் தொடங்குவார்களாம்.

(Fuer Sie என்ற யேர்மனிய மாதசஞ்சிகையிலிருந்து)

Dienstag, Mai 18, 2004

Cartoon எப்படி வந்தது..?

இன்று பத்திரிகைகளில் வரும் Cartoon (கேலிச்சித்திரம்) எப்படி வந்தது என்று தெரியுமா?

இத்தாலி மொழியில் Cartoon என்பது கெட்டியான காகிதத்தைக் குறிக்கும்.
கெட்டியான காகிதங்களில் தான் அப்போது அங்கே ஓவியங்கள் வரைவார்கள்.

1921 ம் ஆண்டில் பிரிட்டனின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தை அலங்கரிக்க ஓவியர்களிடையே போட்டி ஒன்று நடாத்தப் பட்டது. அந்தப் போட்டிக்காக (கெட்டியான காகிதங்களில்) வரையப் பட்ட பல ஓவியங்கள் நிராகரிக்கப் பட்டன.

கேலிச் சித்திரங்கள் போன்று இருந்த - நிராகரிக்கப் பட்ட சில ஓவியங்களை பஞ்ச் என்ற பத்திரிகை ஒன்று பஞ்ச் Cartoon என்ற தலைப்பில் ஒவ்வொன்றாகப் பிரசுரித்தது.

காலப் போக்கில் இவ்வித கேலிச்சித்திரங்களுக்கு Cartoon என்ற பெயர் நிலைத்து விட்டது.

Dienstag, Mai 11, 2004

கர்ப்பிணியா இல்லையா..? கண்டு பிடிக்க ...!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே - ஒரு பெண் கர்ப்பிணியா இல்லையா என்பதைக் கண்டு பிடிக்க எகிப்தியர்கள் கையாண்ட சில சுவாரஷ்யமான முறைகள்.

1 - கோதுமை அல்லது பார்லி தானியத்தின் மீது சம்பந்தப் பட்ட பெண்ணையும்
அவள் கணவனையும் சிறுநீர் கழிக்கச் சொல்லுவார்கள். பெண்ணினுடைய
தானியம் முதலில் முளை விட்டால் அவள் கர்ப்பிணி என்று உறுதி
செய்வார்கள்.

2 - ஒரு சிறிய நாடாவைக் கொளுத்தி அதைப் பெண்ணின் மூக்கினருகே
கொண்டு செல்வார் மருத்துவர். எரியும் நாற்றம் தாங்காமல் அந்தப் பெண்
மயங்கி விழுந்தால் அவள் கர்ப்பிணி என்று முடிவு கட்டுவார்.

3 - கர்ப்பிணிச்செடி என்று பெயரிட்டு ஒரு தாவரத்தை வளர்த்து வந்தனர். சில
எகிப்திய மருத்துவர்கள். மாலையில் இந்தச் செடி மீது கர்ப்பிணிப் பெண்
சிறுநீர் கழிக்க வேண்டும். காலையில் செடி வாடாமல் இருந்தால் அவள்
கர்ப்பிணி என்பது உறுதி!

இந்தச் சோதனையை விளக்கும் அந்தக் காலத்துக் கையெழுத்துப் பிரதி இன்றும் லண்டன் மியூசியத்தில் உள்ளதாம்.

Mittwoch, Mai 05, 2004

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து அனுப்பும் வழக்கம் 1928ம் ஆண்டு அறிஞர் பெரியசாமித் தூரனால் ஏற்படுத்தப்பட்டது. அவர் பனங்குருத்து ஓலைகளை நறுக்கி, திரு.வி.க, கல்கி போன்றவர்களுக்கு பொங்கல் வாழ்த்தை அனுப்பி வைத்தார்.
திரு.வி.க அவர்கள் தமது நவசக்தி நாளேட்டில் அதை வெளியிட்டு
இது போல் அனைவரும் பொங்கல் வாழ்த்தை தயாரித்து அனுப்புங்கள்
என்று கேட்டுக் கொண்டார்.

கல்கண்டு இதழிலிருந்து
சந்திரவதனா.