Samstag, Januar 31, 2009

தீக்குளித்து மரணமடைந்த முத்துக்குமார்

ஈழத் தமிழர் படுகொலை: தீக்குளித்து மரணமடைந்த முத்துக்குமார்

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு இன்று (29.01.2009) வியாழக்கிழமை காலை முத்துக்குமார் எனும் இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் "பெண்ணே நீ" மாத இதழில் நிருபராக பணியாற்றி வந்தவர் முத்துக்குமார் . அதற்கு முன்பு தொலைக்காட்சி தொடர்களில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார். சென்னை கொளத்தூர் மக்கான் தோட்டம் திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்த இவருக்கு வயது 30. தமிழ் மீது அதிகம் ஆர்வம் கொண்ட இவர் எப்போதும் தமிழர்கள் குறித்து ஆர்வமாக பேசுவார். கடந்த சில மாதங்களாக இலங்கையில் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படுவது முத்துக்குமாரின் மனதில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அலுவலகத்துக்கு இன்று காலை 10:30 மணியளவிற்கு வந்த அவர், தன் மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அப்போது, ஈழத் தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களை காப்பாற்றக் கோரியும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவைக் கண்டித்து முழக்கமிட்டபடி சாஸ்திரி பவனுக்குள் அங்கும் இங்கும் அலறியபடி ஓடினார். இதற்கிடையே உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமார் ஒரு இடத்தில் சாய்ந்து விழுந்தார்.

அங்கு வந்த காவல்துறையினர் கரிக்கட்டையாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முத்துக்குமாரை மீட்டனர். அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, ஈழத் தமிழர் நலன் காக்க 14 அம்ச கோரிக்கை அடங்கிய ஒரு துண்டுப் பிரசுரத்தை முத்துக்குமார் வைத்திருப்பது தெரிந்தது. அது தொடர்பான விசாரணை நடந்துக் கொண்டிருக்கும் நிலையில் முத்துக்குமார் உடல்நிலை மோசமானது. பின்னர் அவர் இறந்துப் போனார்.

முன்னதாக காவல்துறையினர் முத்துக்குமாரிடம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது அவர் கூறியதாவது:

எனது பெயர் முத்துக்குமார், எனது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகில் உள்ள ஆத்தூர் கொழுவை நல்லூர் ஆகும். எனது தந்தை தாம்பரத்தில் பழைய இரும்புக்கடை வைத்துள்ளார். எனக்கும் அவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது. எனவே நான் கொளத்தூரில் உள்ள எனது சகோதரி தமிழரசியுடன் வசித்து வருகிறேன். இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும்.
மத்திய அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களை திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக் கொண்டேன். வேறு எங்கும் தீக்குளித்தால் சாதாரணமாக விட்டு விடுவார்கள். எனவே தான் மத்திய அரசு அலுவலகத்துக்குள் சென்று தீக்குளித்தேன். இலங்கை தமிழர்களை காப்பாற்ற தமிழ்நாட்டில் பெரிய அலை கிளம்பி உள்ளது. எனினும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்கள் பலியாவது வேதனையாக இருக்கிறது.

இவ்வாறு முத்துக்குமார் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழருக்காக இளைஞர் ஒருவர் தீக்குளித்து மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தமிழகமே இந்த சம்பவம் அறிந்து பதற்றம் அடைந்துள்ளது.

தீக்குளிப்பு போன்றவற்றை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்த்து உணர்வு வயப்பட வேண்டும். மனித நேயமுள்ளவர்கள் அனைவரின் அன்பு வேண்டுகோள் இது!

Quelle: http://kosukumaran.blogspot.com/2009/01/blog-post_29.html

Keine Kommentare: