Montag, August 28, 2006

மனம் தளராத முயற்சிகள்

அந்த இளைஞன் நன்றாகக் கார்ட்டுன் வரைவான். தான் வரைந்த படங்களை எடுத்துக் கொண்டு போய் பல இடங்களில் காட்டி வேலை கேட்டான். யாரும் வேலை கொடுக்கவில்லை. "இந்தக கார்ட்டுனையெல்லாம் மக்கள் ரசிக்க மாட்டார்கள்" என்று அவனை ஒதுக்கினார்கள். ஆனால் அந்த இளைஞன் தன் முயற்சியைக் கைவிட வில்லை.

இந்தச் சூழ்நிலையில் ஓர் ஆலயத்தில் சிறு பிள்ளைகளுக்கான கார்ட்டுன் படங்களை வரையும் வாய்ப்புக் கிடைத்தது. அவனை ஒரு பழைய குப்பைகூளம் நிறைந்த அறையில் அமர வைத்து படம் வரையச் சொன்னார்கள். அந்த அறையில் எலிகளும், சுண்டெலிகளும் மேலேயும் கீழேயும் ஓடிக் கொண்டிருந்தன. அந்த இளைஞன் மனம் தளரவில்லை. "வேலை வேண்டாம்" என்று ஓடவில்லை. அங்கேயே உட்கார்ந்து படம் வரைந்தான். அங்கு ஓடிய ஒரு எலியையே கார்ட்டுனாக்கினான். அந்தக் கார்ட்டுன்தான் இன்று உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் இருக்கும் மிக்கி மவுஸ். அதை உருவாக்கிய வால்ட் டிஸ்னிதான் அந்தக் கார்ட்டுனிஸ்ட்.

- ரஞ்சன் -
குமுதம் - 21.3.2005

மனம் தளராத முயற்சிகள் நிச்சயம் வெற்றியைக் கொடுக்கும்.

Freitag, November 04, 2005

விநோத வழக்கு

உலக சரித்திரத்திலே மிக நீண்ட காலம் ஒரு வழக்கு பிரான்ஸ் நாட்டில் 15ம் நூற்றாண்டில் நடந்தது. குற்றவாளி யார் தெரியுமா? ஒரு சிறு பூச்சி.

ஐரோப்பாவில் முன்பு இப்படி விலங்குகளைக் குற்றவாளியாக்கி வழக்குகளைத் தொடர்வார்கள். பிரான்ஸ் நாட்டில் மட்டும் கி.பி 1120-1740க்குள் இப்படியான 49வழக்குகள் நடைபெற்றன. 1740இல் ஒரு பசு கொலைக்குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப் பட்டது.

1457இல் லக்வேனி என்ற இடத்தில் ஒரு பெண் பன்றியும் அதன் ஆறு குட்டிகளும் ஒரு குழந்தையை உயிரோடு தின்று விட்டதாக வழக்கு நடந்தது. அதில் பெண் பன்றிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டது. அதன் குட்டிகள் ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்யப் பட்டன.

தகவல் - தினமுரசு.

Dienstag, November 01, 2005

பின்னணிப் பாடகி பி.லீலா மரணம்

பழம் பெரும் சினிமா பின்னணிப் பாடகி பி.லீலா மரணம் அடைந்தார்.

மிஸ்சியம்மா படத்தில் இடம் பெற்ற வாராயோ வெண்ணிலாவே..., வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இடம் பெற்ற கண்ணும் கண்ணும் கலந்து..., ஞான சவுந்தரி படத்தில் இடம் பெற்ற அருள் தரும் தேவ மாதாவே...' இன்னும், ஓரிடந்தனிலே…, வெண்ணிலவே தண்மதியே…, ராஜா மகள் ரோஜா மலர்... போன்ற ஏராளமான பாடல்களைப் பாடியவர் பி.லீலா.

இன்றுவரை தமிழ் திரையிசையுலகில் மிகவும் பிரபலமாகப் பேசப்படும் கொஞ்சும் சலங்கை படத்தில் இடம்பெற்ற சிங்காரவேலனே தேவா... பாடலுக்கு முதலில் பாடுவதற்காக இசையமைப்பாளரால் அழைக்கப்பட்டவர் இந்த பி.லீலா. ஆனால் தன்னைவிட இந்தப் பாடலைப்பாட ஜானகியே சிறந்தவர் என்று அப்போது பரிந்துரைததாராம் லீலா. அந்த அளவுக்கு பரந்த மனது கொண்ட ஒரு பாடகியாக திகழ்ந்த, 76 வயதான லீலா கடந்த ஒரு மாத காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று அதிகாலை 5 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.

லீலா திருமணம் ஆகாதவர். கடைசி காலத்தில் அவருடைய அக்காள் வீட்டில் வசித்து வந்தார். தமிழ் பாடல்கள் தவிர மலையாளம், தெலுங்கு சினிமாப் பாடல்களுடன் ஏராளமான பக்திப் பாடல்களையும் அவர் பாடி இருக்கிறார்.

லீலாவின் உடல் சென்னை போரூரில் உள்ள சுடுகாட்டில் நேற்று மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்குகளை லீலாவின் அக்காள் மகன்கள் நந்தகுமார், கோபி கிருஷ்ணா ஆகியோர் செய்தனர்.

Montag, Oktober 31, 2005

பழைய கணக்கீட்டு முறைகள்

தமிழர்களின் பழைய கணக்கீட்டு முறைகள் மிகவும் வியப்பானவை. மிகவும் நுட்பமான கணக்கீட்டு முறை அவர்களிடமிருந்தது. நுண்மையான அளவுகளிலிருந்து பெரிய அளவுகளை விரிவாய்க் கணக்கிட்டனர். அவர்களின் நீட்டல் அளவு முறை கீழே

8அணு - 1தேர்த்துகள்
8தேர்த்துகள் - 1பஞ்சிழை
8பஞ்சிழை - 1மயிர்
8மயிர் - 1நுண்மணல்
8நுண்மணல் - 1கடுகு
8கடுகு - 1நெல்
8நெல் - 1பெருவிரல்
12பெருவிரல் - 1சாண்
2சாண் - 1முழம்
4முழம் - 1கோல்(அ)பாகம்
500கோல் - 1கூப்பீடு

Dienstag, Oktober 18, 2005

Panagram வாக்கியம்

Panagram என்பது A இலிருந்து Z வரையுள்ள எழுத்துக்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய வாக்கியம்.

A இலிருந்து Z வரையுள்ள 26 ஆங்கில எழுத்துக்களையும் உள்ளடக்கிய வாக்கியம்
Mr.Jock, T.V. quiz PhD, bags few Lynx.

33 எழுத்துக்களுடன்
The quick brown fox jumps over a lazy dog.

32 எழுத்துக்களுடன்
Pack my box with five dozen liquor jugs.

விசிறி

Fanatic என்பதிலிருந்து மிருதுவாக்கப்பட்ட வார்த்தை Fan.
அது தமிழில் விசிறி ஆகி விட்டது

Samstag, Juni 04, 2005

றேகனின் அந்த ஒரு பார்வை

இந்தப் புகைப்படத்தைக் காணும் போதெல்லாம் இனம் புரியாத சோகம் ஒன்று வந்து போகும். Alzheimer நோயினால் பீடிக்கப் பட்டு 5.6.2004இல் மரணமடைந்த அமெரிக்காவின் 40வது ஜனாதிபதியான Ronald Reagan இன் உடல் வைத்திருக்கும் பெட்டியில் முத்தமிட்டு வழியனுப்பிய, 83வயதுகள் நிரம்பிய நான்சி றீகனின் மனதில் எவ்வளவு வருத்தம் இருந்திருக்கும் என்பதை இந்தப் புகைப்படம் அப்படியே சொல்கிறது.

தான் யாரென்பதையே வருடக்கணக்காக மறந்து போயிருந்த Reagan இறக்கும் இறுதித் தறுவாயில் அவரது படுக்கையின் ஒரு பக்கம் அவரது பிள்ளைகளான Patty யும், Ronyயும் அமர்ந்திருக்க மறுபக்கம் நான்சி அமர்ந்திருந்தார்.

இறக்கும் அந்தத் தறுவாயில், மூடியிருந்த Reagan இன் விழிகள் நான்சியினை நோக்கி ஒரு கணம் திறந்து மூடியிருக்கிறது. "Reagan இன் அந்த ஒரு பார்வை எத்தனையோ அர்த்தங்களைக் கொண்டது. என் மீது கொண்ட அன்பின் நிமித்தம் தனது கண்களை, என்னை நோக்கித் திறந்து விடை பெற்றிருக்கிறார்" என்று Nancy Reagan சமீபத்திய தனது பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

52 வருடங்கள் இணைந்து வாழ்ந்த இவர்கள் அன்பு இறுக்கமானதாகத்தான் இருக்கும்.

Dienstag, Mai 31, 2005

அப்பிளைத் தனியாக வையுங்கள்.

எல்லா மரக்கறிகளையும் அல்லது எல்லாப் பழங்களையும் ஒரே பெட்டிக்குள்ளேயோ அல்லது
ஒன்றாகக் குளிர்சாதனப் பெட்டிக்குள்ளேயோ வைக்கக் கூடாது என்பதை நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

தக்காளிப் பழத்துடன் சேர்த்து வைக்கப் படும் மரக்கறிகள் விரைவில் பழுதடைந்து விடுவது போல அப்பிளோடு சேர்த்து வைக்கப் படும் பழங்களும் விரைவில் பழுதடைந்து விடுகின்றன.

காரணம் அப்பிளில் இருந்து வெளியாகும் ஒரு பதார்த்தம் மற்றைய பழங்களை விரைவில்பழுக்க வைக்கும் தன்மை கொண்டது. அதனால் அப்பிளோடு சேர்த்து வைக்கப் படும் பழங்கள் விரைவாகப் பழுத்து பழுதடைகின்றன.

Donnerstag, Mai 19, 2005

விச ஊசியா? ஈரல் தானமா?


தீர்வு எப்படி அமையும்?


அமெரிக்க மரணதண்டனைக் கையாள்தலில் இதுவரை முன் வைக்கப் படாத ஒரு விண்ணப்பம்.

40வயது நிரம்பிய Gregory Johnson அமரிக்க சிறைக்கைதி. கொலைக் குற்றத்தின் காரணமாக, 1986ம் ஆண்டிலிருந்து சிறையிலிருக்கிறார். மே 25ந் திகதி அவருக்கான மரணதண்டனைக்காக விசஊசி காத்திருக்கிறது.

மரணத்துக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் ஒரு காலமும் இல்லாத ஒரு பிரச்சனை அவர் குடும்பத்தின் சார்பாக உருவாகியுள்ளது. கல்லீரல் வீக்கத்தினால் பாதிக்கப் பட்டிருக்கும் ஜோன்சனின் சகோதரிக்கு அவசரமாக ஒரு புதிய ஈரல் தேவைப் படுகிறது. தனது ஈரலை தனது சகோதரிக்குக் கொடுக்க ஜோன்சனும் விரும்புகிறார். அவரது ஈரல் சகோதரிக்குப் பொருந்தும் எனவும் வைத்தியர்கள் உத்தரவாதமளித்துள்ளனர்.

மரணதண்டனைக்காகக் காத்திருக்கும் இவரால் தனது ஈரலை தனது சகோதரிக்குத் தானம் செய்ய முடியுமா? சட்டம் அதற்கு அனுமதிக்குமா?

விசஊசி ஏற்றப்பட்டால் இவரது அனைத்து அவயவங்களும் செயலிழந்து விடும்.
இந்த இக்கட்டில் நீதிபதி என்ன முடிவு சொல்லப் போகிறார். நாளை வெள்ளி வரை காத்திருப்போம்.

Dienstag, Mai 17, 2005

அடையாளமா...? தொலைத்தாரா...?

2000 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு தோற்சப்பாத்தை தென்மேற்கு பிரித்தானியாவில் உள்ள ஒரு சுரங்கப்பள்ளத்துக்குள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். கிட்டத்தட்ட 30cm நீளமான, அதாவது தற்போதைய ஐரோப்பிய அளவில் 43-44 அளவுகளைக் கொண்ட இச்சப்பாத்து கிட்டத்தட்ட தற்போதைய சப்பாத்துக்கள் போலவே தைக்கப் பட்டு நூல் போட்டுக் கட்டுவதற்கான ஓட்டைகளுடன் காணப் படுகின்றது.

சுரங்கப்பள்ளத்துகள் தண்ணீர் நிறைந்திருந்த காரணத்தால் கிறிஸ்துவுக்கு முன் 700ம் ஆண்டிலிருந்து கிறிஸ்துவுக்குப் பின் 43ம் ஆண்டுக்குள்ளான காலத்தான என நம்பப் படுகின்ற சுரங்கப்பள்ளத்துள் இருந்த மரப்பொந்துக்குள் காணப்பட்ட இச்சப்பாத்து இன்னும் பழுதடையாமலே இருக்கிறது.

இச் சப்பாத்து ஒரு அடையாளமாக அம் மரப்பொந்தினுள் வைக்கப் பட்டதா அல்லது சப்பாத்துக்குரியவர் சேற்றிலே வழுக்கியதில் அச் சப்பாத்தைத் தொலைத்தாரா என்பது தெரியவில்லை.

Freitag, Dezember 10, 2004

எலிசபெத் ரெய்லர்

மரம் பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி இரந்தழைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பெண்ணிடம் அழகும் இளமையும் இருக்கும் போது அவள் காலடியில் கூட விழத் தயாராக இருப்பார்கள் ஆண்கள்.

திரையுலக தேவதை எலிசபெத் ரெய்லர் இன்று தனிமையில் வாடுகிறார். அன்புக்காக ஏங்குகிறார். அவரது தோலில் சுருக்கங்கள் விழ ஆண்களும் அவரை விட்டுப் போய் விட்டார்கள்.

தற்போது 72வயதுகளைத் தொட்டிருக்கும் எலிசபெத் ரெய்லர், சமையற்கலைஞர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர், அரசியல்வாதி, கட்டிடத் தொழிலாளர் என சமூகத்தின் பல மட்டங்களிலும் இருந்தும் எட்டுத் தடவைகள், ஏழு ஆண்களைத் திருமணம் செய்து கொண்டார். எட்டுத் தடவைகள் விவாகரத்தும் செய்து கொண்டார். இதில் பிரித்தானிய நடிகர் ரிச்சர்ட் பற்றனை மட்டும் இரண்டு தடவைகள் திருமணம் செய்து கொண்டார்.

இவரது அழகும் பட்டுப்போன்ற கவர்ச்சியான சிரிப்பும் ஆண்களை இவரது காலடியில விழ வைத்தன. ஆனால் இன்று..? இந்த வயதில் தனிமை வந்திருக்கிறது. பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நண்பர்கள் உறவுகள்.. என்று பலரும் அவரைச் சூழ்ந்திருந்தாலும் நெருக்கமாக இருந்து கண்ணீரைத் துடைத்து விடவோ, அணைத்துக் கொள்ளவோ வாழ்க்கைத் துணையென்ற ஒன்று, இன்று அவருக்கு இல்லை.

இவரது இன்றைய நெருங்கிய நண்பன் இவர் வளர்க்கும் 12வயது நிரம்பிய சிறிய வகை நாய் ஒன்றே. இவரது படுக்கையின் ஒரு தலையணையில் உரிமையுடன் படுதுத்துறங்கும் அந்த நாயின் பெயர் சுகர்.

உடல் தளர்ந்து முகத்தில் சுருக்கங்கள் விழுந்து தளர்ந்து போயிருக்கிறார். இதயம் பலவீனப்பட்டு இருக்கிறது. முதுகெலும்பு வளைந்து நின்று முதுமையை அப்பட்டமாகச் சொல்கிறது. ஓடித் திரிந்த கால்கள் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் பலமிழந்து நிற்கின்றன. இவரைச் சுற்றி வைத்தியர்கள் எப்பொழுதும் இருக்கிறார்கள். ஆனாலும் இவரால் முதுமையை மட்டும் வெல்ல முடியவில்லை.

இருந்தாலும் "மிக அழகிய இனிமையான நினைவுகள் என்னிடம் உள்ளன.
அந்த நினைவுகளே முதுமையை வெல்ல எனக்குப் போதும்." என்கிறார் எலிசபெத் ரெய்லர்.

சந்திரவதனா
2.12.2004

Montag, November 29, 2004

Fred Hale Senior தனது 113வது வயதில் இறந்து விட்டார்.

உலகிலேயே அதிக வயதான ஆண் Fred Hale Senior தனது 113வது வயதில் இறந்து விட்டார்.

இவர் 1890ம் ஆண்டு மார்கழி மாதம் 1ந் திகதி Maine இல் பிறந்தார். 5.3.2004 இல் கின்னஸ் புத்தகத்தில் உலகில் அதி கூடிய வயதான ஆண் என்ற இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

109வயது வரை தான் பிறந்த நகரிலேயே வாழந்து வந்த இவர், அதன்பின் தனது மகன் வாழும் நியூயோர்க்கில் உள்ள Dewitt க்கு இடம் மாறியிருந்தார்.

அங்கு நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக தனது 114வது பிறந்தநாளுக்கு 12 நாட்கள் முன்பாக 19.11.2004 அன்று, நித்திரையிலேயே இறந்து விட்டார்.

தற்போதைய அதி கூடிய வயதான ஆண் மனிதர் Hermann Dörne. இவர் யேர்மனியின் Düsseldorf நகரில் வசிக்கிறார். இவருக்கு வயது 111.
ஆனால் இதே வயதில் இன்னும் 26 பெண்கள் வாழ்கிறார்கள் என நியூயோர்க்கைச் சேர்ந்த முதுமை பற்றிய ஆராய்ச்சிக்குழு அறியத் தந்துள்ளது.

Donnerstag, Oktober 28, 2004

எறும்பு போல் சுறுசுறுப்பாய்...?


எறும்புகள் மிகவும் சுறுசுறுப்பானவை எனத்தான் நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அப்படியில்லையென Biologe pro.Jurgen Heinz அடித்துக் கூறுகிறார்.

எறும்புகள் ஐந்து நிமிடங்கள் வேலை செய்தால் 25 நிமிடங்கள் ஓய்வெடுக்கின்றனவாம். அவரது ஆராய்சியின் படி, மனிதர்களை விட எறும்புகள் குறைவாகத்தான் வேலை செய்கின்றனவாம்.

- தகவல் - HT-Schwaebisch Hall 15.7.1999 -

எனது கருத்து :
இனி யாரும் யாருக்கும் சொல்லாதீர்கள்
"எறும்பு போல் சுறுசுறுப்பாய் இரு" என்று

Donnerstag, Mai 20, 2004

குழந்தை விரைவில் கதைக்கத் தொடங்குவதற்கு

ஓரு குழந்தை விரைவில் கதைக்கத் தொடங்குவதற்கும், கதைக்கப் பிந்துவதற்கும் குழந்தையின் புத்திசாலித்தனம் காரணமல்ல என அமெரிக்க Yale பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Steven Reznik கூறுகிறார்.

ஓரு குழந்தை விரைவில் கதைக்கத் தொடங்குவதற்கும், கதைக்கப் பிந்துவதற்கும் காரணம்
ஒன்று - பரம்பரை
இரண்டாவது - தாய் தந்தையர்
என அவர் கூறுகிறார்.

தாய் தந்தையர் பிள்ளையுடன் எவ்வளவு தூரம் கதைக்கிறார்களோ அவ்வளவு விரைவில் பிள்ளைகள் கதைக்கத் தொடங்குவார்களாம்.

(Fuer Sie என்ற யேர்மனிய மாதசஞ்சிகையிலிருந்து)

Dienstag, Mai 18, 2004

Cartoon எப்படி வந்தது..?

இன்று பத்திரிகைகளில் வரும் Cartoon (கேலிச்சித்திரம்) எப்படி வந்தது என்று தெரியுமா?

இத்தாலி மொழியில் Cartoon என்பது கெட்டியான காகிதத்தைக் குறிக்கும்.
கெட்டியான காகிதங்களில் தான் அப்போது அங்கே ஓவியங்கள் வரைவார்கள்.

1921 ம் ஆண்டில் பிரிட்டனின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தை அலங்கரிக்க ஓவியர்களிடையே போட்டி ஒன்று நடாத்தப் பட்டது. அந்தப் போட்டிக்காக (கெட்டியான காகிதங்களில்) வரையப் பட்ட பல ஓவியங்கள் நிராகரிக்கப் பட்டன.

கேலிச் சித்திரங்கள் போன்று இருந்த - நிராகரிக்கப் பட்ட சில ஓவியங்களை பஞ்ச் என்ற பத்திரிகை ஒன்று பஞ்ச் Cartoon என்ற தலைப்பில் ஒவ்வொன்றாகப் பிரசுரித்தது.

காலப் போக்கில் இவ்வித கேலிச்சித்திரங்களுக்கு Cartoon என்ற பெயர் நிலைத்து விட்டது.

Dienstag, Mai 11, 2004

கர்ப்பிணியா இல்லையா..? கண்டு பிடிக்க ...!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே - ஒரு பெண் கர்ப்பிணியா இல்லையா என்பதைக் கண்டு பிடிக்க எகிப்தியர்கள் கையாண்ட சில சுவாரஷ்யமான முறைகள்.

1 - கோதுமை அல்லது பார்லி தானியத்தின் மீது சம்பந்தப் பட்ட பெண்ணையும்
அவள் கணவனையும் சிறுநீர் கழிக்கச் சொல்லுவார்கள். பெண்ணினுடைய
தானியம் முதலில் முளை விட்டால் அவள் கர்ப்பிணி என்று உறுதி
செய்வார்கள்.

2 - ஒரு சிறிய நாடாவைக் கொளுத்தி அதைப் பெண்ணின் மூக்கினருகே
கொண்டு செல்வார் மருத்துவர். எரியும் நாற்றம் தாங்காமல் அந்தப் பெண்
மயங்கி விழுந்தால் அவள் கர்ப்பிணி என்று முடிவு கட்டுவார்.

3 - கர்ப்பிணிச்செடி என்று பெயரிட்டு ஒரு தாவரத்தை வளர்த்து வந்தனர். சில
எகிப்திய மருத்துவர்கள். மாலையில் இந்தச் செடி மீது கர்ப்பிணிப் பெண்
சிறுநீர் கழிக்க வேண்டும். காலையில் செடி வாடாமல் இருந்தால் அவள்
கர்ப்பிணி என்பது உறுதி!

இந்தச் சோதனையை விளக்கும் அந்தக் காலத்துக் கையெழுத்துப் பிரதி இன்றும் லண்டன் மியூசியத்தில் உள்ளதாம்.

Mittwoch, Mai 05, 2004

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து அனுப்பும் வழக்கம் 1928ம் ஆண்டு அறிஞர் பெரியசாமித் தூரனால் ஏற்படுத்தப்பட்டது. அவர் பனங்குருத்து ஓலைகளை நறுக்கி, திரு.வி.க, கல்கி போன்றவர்களுக்கு பொங்கல் வாழ்த்தை அனுப்பி வைத்தார்.
திரு.வி.க அவர்கள் தமது நவசக்தி நாளேட்டில் அதை வெளியிட்டு
இது போல் அனைவரும் பொங்கல் வாழ்த்தை தயாரித்து அனுப்புங்கள்
என்று கேட்டுக் கொண்டார்.

கல்கண்டு இதழிலிருந்து
சந்திரவதனா.

Dienstag, April 27, 2004

கறுப்பு விதவை

ஏறக்குறைய 1செ.மீ அளவுள்ள பெண்சிலந்தி ஒன்றுக்கே இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. கறுப்பு நிறம் கொண்ட இச்சிலந்தியின் முதுகில் பல்வேறு எண்ணிக்கையில் சிவப்புப் புள்ளிகள் காணப்படும்.

இவை அமெரிக்காவில், வெப்பம் சூழ்ந்த இடங்களிலும், புற்கள், புதர்கள் நிறைந்த இடங்களிலும், சோளப்பண்ணைகளிலும், மனிதநடமாட்டமில்லாத பாழடைந்த வீடுகளிலுமே பெரும்பான்மையாகக் காணப்படுகின்றன.

தன்னைவிட 5மடங்கு பருமனான உயிரினத்தை ஒரேநேரத்தில் உண்ணக்கூடிய சக்தியை இச்சிலந்தி கொண்டுள்ளது. இது மனிதர்களுக்குக் கடித்தால், பத்திலிருந்து இருபது நிமிடங்களுக்குப் பின்னரே மனிதர்கள் இதன் வலியை உணர்ந்து கொள்வார்கள்.
இதனுடைய நச்சுத்தன்மை உடலில் பரவுவதால் செங்குருதிச் சிறுதுணிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் கடுமையான வலி உண்டாகி ஒருவித பய உணர்வு ஏற்படும்.
சிலர் இச்சிலந்தி கடித்ததால் இரத்தத்தில் நச்சுத்தன்மை ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இவ்வகைச் சிலந்திகள் உடல் உறவு கொண்டபின் பெண்சிலந்தி ஆண்சிலந்தியைக் கொன்று தின்றுவிடும். எனவேதான் இக்கறுப்பின சிலந்திகளுக்கு கறுப்பு விதவை எனப் பெயர் வந்தது.

Montag, März 22, 2004

விளம்பரத் துறை

முதன் முதல் விளம்பர நோட்டீஸ் ஒட்டியவர்கள் ஜேர்மனியர்கள். 1466 ம் ஆண்டு தெருச்சுவர்களில் விளம்பர நோட்டீஸ்களை ஒட்டி விளம்பரத் துறையை ஆரம்பித்து வைத்தார்கள். 1786 ம் ஆண்டு வில்லியம் ரெய்லர் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்தவரால் விளம்பரக் கொம்பனி முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது. 1941 ஜுலை 1 ம் திகதி முதல் விளம்பரம் தொலைக் காட்சியில் காட்டப்பட்டது. காட்டப்பட்ட பொருள் கை மணிக்கூடு.

Samstag, März 20, 2004

நாய்தான் நமக்கு சீனியர்.

நாய்தான் அழகுப் போட்டியில் நமக்கு சீனியர்.
முதல் முதல் அழகுப் போட்டி நாய்களுக்கிடையில் 1859 ம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்றது.
அதற்குப் பிறகு 29 ஆண்டுகள் கழித்துத்தான் மனிதர்களுக்கிடையிலான அழகுப் போட்டி பற்றிய எண்ணம் யாருக்கோ வந்தது.
முதல் முதலாக மனிதர்களுக்கிடையிலான அழகுப் போட்டி 1988 இல் பெல்ஜியத்தில் நடைபெற்றது.