
திரையுலக தேவதை எலிசபெத் ரெய்லர் இன்று தனிமையில் வாடுகிறார். அன்புக்காக ஏங்குகிறார். அவரது தோலில் சுருக்கங்கள் விழ ஆண்களும் அவரை விட்டுப் போய் விட்டார்கள்.
தற்போது 72வயதுகளைத் தொட்டிருக்கும் எலிசபெத் ரெய்லர், சமையற்கலைஞர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர், அரசியல்வாதி, கட்டிடத் தொழிலாளர் என சமூகத்தின் பல மட்டங்களிலும் இருந்தும் எட்டுத் தடவைகள், ஏழு ஆண்களைத் திருமணம் செய்து கொண்டார். எட்டுத் தடவைகள் விவாகரத்தும் செய்து கொண்டார். இதில் பிரித்தானிய நடிகர் ரிச்சர்ட் பற்றனை மட்டும் இரண்டு தடவைகள் திருமணம் செய்து கொண்டார்.
இவரது அழகும் பட்டுப்போன்ற கவர்ச்சியான சிரிப்பும் ஆண்களை இவரது காலடியில விழ வைத்தன. ஆனால் இன்று..? இந்த வயதில் தனிமை வந்திருக்கிறது. பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நண்பர்கள் உறவுகள்.. என்று பலரும் அவரைச் சூழ்ந்திருந்தாலும் நெருக்கமாக இருந்து கண்ணீரைத் துடைத்து விடவோ, அணைத்துக் கொள்ளவோ வாழ்க்கைத் துணையென்ற ஒன்று, இன்று அவருக்கு இல்லை.
இவரது இன்றைய நெருங்கிய நண்பன் இவர் வளர்க்கும் 12வயது நிரம்பிய சிறிய வகை நாய் ஒன்றே. இவரது படுக்கையின் ஒரு தலையணையில் உரிமையுடன் படுதுத்துறங்கும் அந்த நாயின் பெயர் சுகர்.
உடல் தளர்ந்து முகத்தில் சுருக்கங்கள் விழுந்து தளர்ந்து போயிருக்கிறார். இதயம் பலவீனப்பட்டு இருக்கிறது. முதுகெலும்பு வளைந்து நின்று முதுமையை அப்பட்டமாகச் சொல்கிறது. ஓடித் திரிந்த கால்கள் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் பலமிழந்து நிற்கின்றன. இவரைச் சுற்றி வைத்தியர்கள் எப்பொழுதும் இருக்கிறார்கள். ஆனாலும் இவரால் முதுமையை மட்டும் வெல்ல முடியவில்லை.
இருந்தாலும் "மிக அழகிய இனிமையான நினைவுகள் என்னிடம் உள்ளன.
அந்த நினைவுகளே முதுமையை வெல்ல எனக்குப் போதும்." என்கிறார் எலிசபெத் ரெய்லர்.
சந்திரவதனா
2.12.2004